100 ஆண்டுகளின் பின்னர் விஞ்ஞானிகள் ஈர்ப்புஅலைகளை முதன்முதலில் கண்டறிந்துள்ளனர்.
ஈர்ப்புஅலைகள் என்பது, பிரபஞ்ச வெளியில் உருவாகும் அலைகளாகும். இந்த அலைகள், பிரபஞ்சத்தில் இடம்பெறும் மிகவும் உக்கிரமான மற்றும் சக்திவாய்ந்த நிகழ்வுகளால் தோற்றுவிக்கப்படுகின்றன. கருந்துளைகள் மோதுவது, விண்மீன் வெடிப்பது, மற்றும் பிரபஞ்சம் உருவாகுவது போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஈர்ப்புஅலைகள் இருக்கின்றன என்று முதன்முதலில் 1916 இல் கணித்தவர் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார். ஆனால் அதற்கான சான்று அடுத்த 100 வருடங்கள் வரை கிடைக்கவில்லை.
செப்டம்பர் 14, 2015 இல் முதன்முதலில் ஈர்ப்புஅலைகள் கண்டறியப்பட்டன. இந்த ஈர்ப்புஅலைகள், ஒரு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இரண்டு கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதியபோது உருவாகியவை. இந்த மோதல் பிரபஞ்ச வெளியை வெகுவாகக் குலுக்கியதால், குளத்தில் எறிந்த சிறுகல் எப்படி நீரலைகளை உருவாக்குமோ அதேபோல, வெளிநோக்கி எல்லாத்திசைகளிலும் ஈர்ப்புஅலைகள் உருவாகிச்சென்றன.
இந்த அலைகள் பிறக்கும் போது மிகவும் உக்கிரமாக இருந்தாலும், பூமியை வந்தடையும் போது, இவை மிகவும் சக்தி குறைந்த அலைகளாக மாறி இருந்தன - இவை மனித முடியின் அளவில் மில்லியன், மில்லியன் அளவு சிறியதாக இருந்தன! ஆகவே இவற்றை அளப்பதற்கு மிகவும் சக்திவாய்ந்த துல்லியமான கருவிகள் வேண்டும்: அவைதான் LIGO கருவிகள்.
இரண்டு LIGO கருவிகள் பூமியில் உண்டு. இரண்டு கருவிகளும் நான்கு கிமீ நீளமான “L” வடிவக் குழாய்களைக் கொண்டிருக்கின்றன. லேசர் கற்றைகள் இந்த குழாய்களில் அனுப்பப்படும், அதன்மூலம் இந்தக் குழாய்களின் நீளம் மிகத்துல்லியமாக கணக்கிடப்படும்.
ஈர்ப்புஅலைகள் பூமியைக்கடந்து செல்லும் போது, அது பூமியை ரப்பர் பந்துபோல இழுத்து நெருக்கும்; ஆனால் மிக மிகச் சிறியளவு மட்டுமே. இந்த மிகச் சிறியளவு நீளமாற்றம் LIGO குழாய்களின் நீளத்தை மாற்றும். இந்த நீளமாற்றத்தை அளந்ததன் மூலமே நாம் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிந்தோம், மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்தோம். இதன்மூலம் ஐன்ஸ்டீன் எவ்வளவு புத்திசாலி என்பதும் கண்கூடாகத் தெரிகிறதல்லவா!
ஆர்வக்குறிப்பு
இரண்டு கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது உருவாகும் சக்தியின் அளவு, பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து விண்மீன்களின் ஒளியின் சக்தியைவிட... பத்துமடங்கிற்கும் அதிகமாகும்! ஆனால் இந்த சக்தி மிகமிக சொற்ப காலத்திற்கே நீடிக்கும்.
Share: