உங்களிடம் செல்லப்பிராணி எதாவது இருக்கிறதா? அப்படியிருந்தால் அதன் பெயர் என்ன? (உங்களிடம் அப்படி இல்லாவிடில், ஏதாவது செல்லப்பிராணி இருந்தால் என்ன பெயர் வைத்திருப்பீர்கள் என்று கற்பனை செய்துபாருங்கள்.) இப்போது உங்கள் செல்லப்பிராணி பத்துக் குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். பிறந்த குட்டிகளை என்ன சொல்லி அழைப்பீர்கள்? அடுத்ததாக இந்தப் பத்துக் குட்டிகளும் பெரிதாகி ஒவ்வொன்றும் பத்துப் பத்துக் குட்டிகளைப் பெற்றெடுத்தால் அவற்றை எப்படி அழைப்பீர்கள்?
இந்த நிலை தொடர்ந்துசென்றால், புதிதாக என்ன பெயர் வைக்கலாம் என்று நீங்கள் சிந்திப்பதற்கு வெகுநேரம் ஆகிவிடாது. இப்போது இரவு வானில் தெரியும் அனைத்துப் பிரபஞ்ச அதிசயங்களுக்கும் பெயர் வைத்து அழைக்கவேண்டுமெனில் உங்களுக்கு முடிவற்ற கற்பனைத்திறன் வேண்டும்.
சில நூறு வான்பொருட்களுக்கே “சம்பிரதாயமான “ பெயர் வைத்து அழைக்கிறோம். உதாரணமாக வியாழன், அன்றோமீடா, பெல்லாட்ரிக்ஸ். பெரும்பாலான மற்றைய வான்பொருட்களுக்கு பெயரானது, எழுத்து மற்றும் இலக்கங்கள் ஆகியவற்றின் கலவையாக வைக்கப்படுகிறது. இதனை நீங்கள் பெயர்ப்பட்டியல் (catalogue) போல நினைத்துக் கொள்ளலாம். எழுத்துக்கள் – பட்டியலுக்கான குறி எழுத்து, இலக்கங்கள் – பட்டியல் புத்தகத்தின் பக்க இலக்கம். உதாரணமாக, இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் விண்மீன் கொத்திற்கு வைத்துள்ள துரதிஷ்டவசமான பெயர் IC4651.
இந்த விண்மீன் கொத்தானது குறியீட்டுப் பெயர்ப்பட்டியலில் (Index Catalogue) குறிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வந்ததுதான் முதல் இரண்டு எழுத்துக்களும் – IC. அதனைத் தொடர்ந்துவரும் இலக்கங்கள், அந்தக் குறியீட்டுப் பெயர்ப்பட்டியலில் இந்த குறிப்பிட்ட விண்மீன் கொத்தை கண்டறிய உதவுகிறது. நமது உதாரணப்படி, இந்த விண்மீன் கொத்து அந்தப் பட்டியலில் இருக்கும் 4651வது வான்பொருளாகும். இந்தப் பெயர்கள் அவ்வளவு சுவாரஸ்யமானதாக இல்லாவிடினும், மில்லியன் கணக்கான வித்தியாசமான பெயர்களை சிந்திப்பதைவிட இவை இலகுவானது!
விண்ணியலாளர்கள் நீண்டகாலமாக வான்பொருட்களின் பெயர்கள், அதன் அமைவிடம் மற்றும் அவற்றின் அம்சங்களை குறித்துவந்துள்ளனர். முதலாவது விண்ணியல் பெயர்ப்பட்டியல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய விண்மீன்களின் பெயர்ப்பட்டியல் இன்றும் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 2014 இல் விண்ணியலாளர்கள் அண்ணளவாக நமது பால்வீதியில் இருக்கும் 84 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களின் பெயர்ப்பட்டியலை உருவாக்கியுள்ளனர்!
ஆர்வக்குறிப்பு
வான்பொருட்களின் பெயர்ப்பட்டியலில் மிகவும் பிரபல்யமானது “மெசியர் பெயர்ப்பட்டியல்” ஆகும். அதிலுள்ள அழகிய 110 வான்பொருட்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மெசியர் பின்கோ என்ற விளையாட்டை விளையாடிப் பாருங்களேன்! lcogt.net/messierbingo
Share: